News

‘கபாலி’- திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் இணைந்துவிட்டாலே எந்த ஒரு விஷயமும் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றுவிடும். இன்று வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில் அவருடன் இணைந்திருப்பது விமரச்கர்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் பா.ரஞ்சித். அதோடு தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ். தாணுவின் பிரம்மாண்ட பிரமோஷன், ‘கபாலி’ பட வெளியீட்டை உலகத் தமிழர்களின் திருவிழாவாக மாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக அனைவரது பேச்சும் கபாலி டிக்கெட் பற்றித்தான் இருந்தது. இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ ரஜினிகாந்த் என்ற நல்ல நடிகன் மிகச் சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

மலேசிய தமிழர்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ‘நல்ல’ தாதா கபாலி (ரஜினிகாந்த்) 25 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்று திரும்புகிறார். கைது செய்யப்படும் முன் கர்ப்பவதியாக இருந்த அவரது மனைவி (குமுதவல்லி) இப்போது உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தவிக்கிறார். மலேசியாவில் தமிழர்களின் சம உரிமைகளுக்காகப் போராடி சந்தர்பவசத்தால் தாதா ஆகிவிட்ட கபாலி, இப்போது விடலை வயதில் தவறான பாதைக்குச் சென்று படிப்பைப் பாதியில் விட்டுவிட்ட தமிழ் இளைஞர்களுக்கான இலவசப் பள்ளியை நடத்துகிறார்.

ஆனால் தமிழ் இளைஞர்கள் தவறான பாதைக்குப் போவதைத் ஒட்டுமொத்தமாக நிறுத்த, மலேசியாவில் போதைக் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் நடத்தும் மாஃபியாவை வீழ்த்த வேண்டும். அந்த மாஃபியாவின் தலைவன் டாங் லீ (வின்ஸ்டன் சோ) மற்றும் தமிழனான வீரசேகரன் (கிஷோர்). இந்த கொடூரமான சாம்ராஜ்யத்தை கபாலி எப்படி வீழ்த்துகிறார் என்பதே மீதிக் கதை.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறோம். இது சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் அல்ல. ரஜினிக்குள் இருக்கும் தேர்ந்த நடிகன் மிக வலிமையாகவும் சிறப்பாகவும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வெளிப்பட்டிருக்கும் படம். ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் முகபாவம். உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு நம் மனக்களைக் கொள்ளை கொள்கின்றன.

‘பில்லா’, ‘பாட்ஷா’ போன்ற மாபெரும் வசூல் வெற்றிப் படங்களை மட்டுமல்லாமல், ’புவனா ஒரு கேள்விக்குறி’, ’முள்ளும் மலரும்’ போன்ற படங்களில் சிறப்பாகப் பொருந்துவதிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்று ‘கபாலி’ மூலம் நிரூபித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

வசூல் சக்ரவர்த்தி என்று போற்றப்படும் ரஜினி, தன் நட்சத்திர பிம்பத்துக்கு ஏற்ற திரைக்கதைகளை எழுத பல இயக்குனர்கள் காத்திருக்கும்போது ரஞ்சித்தின் கதை-திரைக்கதைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஒரு குழந்தை பெற்றோரை நம்புவதுபோல் இயக்குனரையும் கதை-திரைக்கதையையும் நம்பியிருக்கிறார். இதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கடந்த 20 ஆண்டுகளில் வெளியான ரஜினி படங்களிலிருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டிருக்கிறது ‘கபாலி’. பஞ்ச் வசனங்கள் இல்லவே இல்லை, மாஸ் காட்சிகள் மிகக் குறைவு, ஆனால் வலிமையானவை. சண்டைக் காட்சிகளை விட உணர்வுப்பூர்வமான காட்சிகள்தான் படத்தில் அதிகம். யதார்த்தமான படத்தைத் தரும் இயக்குனரின் முனைப்பு தெளிவாகத் தெரிகிறது. திரை விமர்சனங்களில் இப்படிச் சொல்வது ஒரு க்ளிஷேதான் என்றாலும், ரஜினி தன் நடிப்பாலும் திரை ஆளுமையாலும் படத்தைத் தோளில் தாங்குகிறார் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ரஜினியை வைத்து அவர் நடிப்புத் திறனுக்கு அதிக தீனீபோடும் படத்தை இயக்கிய ரஞ்சித்தைப் பாராட்ட வேண்டும். ரஞ்சித்தின் எழுத்து மற்றும் இயக்கும் திறன் மீதிருந்த நம்பிக்கைதான் ரஜினியை இந்தப் படத்தில் நடிக்கவைத்திருக்கிறது என்பதற்காகவும்.

ஆனால் ரஞ்சித்திடமிருது நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இந்தப் படத்தில் குறைவாகவே கிடைக்கின்றன. சில எமோஷனல் காட்சிகளும். டுவிஸ்ட்களும், மாஸ் காட்சிகளும் ரசிக்கவைத்தாலும் ஒட்டுமொத்தமாக கதை—திரைக்கதை ஈர்க்கவில்லை. இன்னும் அதிகம் மெனக்கெட்டு, பலமான வில்லன் உள்ளிட்ட சில வலிமையான அம்சங்களைக் கூட்டியிருக்கலாம்.

மலேசியத் தமிழர்களின் வாழ்நிலை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஃப்லாஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.

ரஞ்சித்தின் வசனமெழுதும் திறன் வெகுவாக கைகொடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களின் விடுதலைக்கான வசனங்கள் சிறப்பாக உள்ளன. இந்த ஒடுக்கப்படுதல் காட்சிபூர்வமாகவும் காண்பிக்கப்பட்டிருந்தால் வசனங்கள் இன்னும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மலேசிய தமிழர்களுக்கிடையே சாதி ரீதியான ஒடுக்குமுறையும் சூசகமாக உணர்த்தப்பட்டுள்ளன. காந்தி, அம்பேத்கர் போன்றோரின் போராட்ட வழிமுறை பற்றிப் பேசும் இடம் உள்ளிட்ட அரசியல் சார்ந்த வசனங்களில் ரஞ்சித்தின் எழுத்துத் திறனும் தெளிவான அரசியல் பார்வையும் பளிச்சிடுகின்றன.

பொழுதுபோக்கை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தில் சில மாஸ் காட்சிகள் இருக்கின்றன. ரஜினி உச்சரிக்கும் நெடிய வசனங்கள் அனைத்தும் கைதட்டல்களை அள்ளுகின்றன. படம் பெருமளவில் மெதுவாகவே நகர்கிறது. அப்படித் தோன்றாமல் இருக்கத் தேவையான அழுத்தமான காட்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன என்பதுதான் சிக்கல்.

இருப்பினும் ஆங்காங்கே வரும் திருப்பங்களும், அளவான, அழுத்தமான சண்டைக் காட்சிகளும், கடைசி 15-20 நிமிட காட்சியும் பார்வையாளர்களின் கவனம் சிதறுவதைக் கட்டுப்படுத்துகின்றன.படத்தின் க்ளைமாக்ஸ் பலருக்கு ஆச்சரியம் அளிக்கும்.

ரஜினிகாந்த் ஒரு நடிகராக தன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்த படங்களிக் ‘கபாலி’ முக்கிய இடம் பெறும். ராதிகா ஆப்தேவின் பாத்திரம் சற்று விரிவுபடுத்தப்பட்ட கெளரவத் தோற்றத்தில் வந்தாலும் எமோஷனல் காட்சிகளில் மிகச் சரியாக நடித்து நல்ல பெயர் வாங்குகிறார். .

துணிச்சலான பெண் பாத்திரத்துக்கு, சாய் தன்ஷிகா கன கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பில் ஸ்கோர் செய்வதோடு சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். கபாலிக்காக எதையும் செய்யும் துடிப்பு மிக்க இளைஞனாக தினேஷ் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். கபாலியின் நண்பன் ஆமீராக ஜான் விஜய் நிறைவாக நடித்திருக்கிறார்.

கலையரசன் மற்றும் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருக்கும் பலர் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார்.கள் தங்களது பாத்திரத்துக்குத் தேவையானதை சரியாகத் தந்திருக்கிறார்கள்.

சக்திவாய்ந்த வில்லன்கள் இல்லாமல் இருப்பது கபாலி படத்தின் அகப் பெரிய குறை. வின்ஸ்டன் சாவ், சீனாக்காரரைப் போல் இருக்கும் வில்லன் என்ற கதையின் தேவையைப் நிறைவேற்றுவதைத் தவிர வெறந்த பங்களிப்பையும் வழங்கவில்லை. கிஷோர், கொடுத்த வேடத்தில் முத்திரை பதிக்க முயன்று ஓரளவு சமாளித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் வெற்றிபெற்றுவிட்ட பாடல்கள் திரைக்கதையில் அழகாகப் பொருந்தியிருப்பதோடு சரியான அளவில் சில பாடல்கள் முழுதாகவும் சில பாடல்கள் மாண்டேஜாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை பிரமாதம் இல்லை என்றாலும் மோசமும் இல்லை. ஜி.முரளியின் ஒளிப்பதிவு மலேஷியாவை மனதுக்கு நெருக்கமாகப் பதிவு செய்கிறது பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் தொழில்நுட்பம் சார்ந்த குறை ஒன்றும் இல்லை. படம் மெதுவாக நகர்வதற்கும் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தேவைக்கதிகமாக நீள்வதற்கும் அவரைப் பொறுப்பாக்கலாமா அல்லது திரைக்கதை ஆசிரியரையா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ரஜினியின் சிறப்பான நடிப்பு, பல நல்ல வசனங்கள், மனதைத் தொடும் எமோஷனல் காட்சிகள் ஆகியவற்றுக்காகவும் ஒரு மாறுபட்ட ரஜினியைப் பார்க்க வைத்ததற்காகவும், அனைவரும் பார்க்க வேண்டிய படமாகிறது ’கபாலி’

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top