News

கோவை போலீஸ் முன் ஆஜரான அனிருத்

பீப் சாங் விவகாரம் தொடர்பாக, இசையமைப்பாளர் அனிருத், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன்பு, நேற்று (11ம் தேதி) இரவு 11 மணியளவில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அனிருத் தரப்பில், 2 பக்க விளக்க கடிதமும் போலீசிடம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களை இழிவாக சி்த்தரிக்கும் வகையிலான பாடலை, நடிகர் சிம்பு எழுதி பாடியிருந்தார். இந்த பாடலுக்கு, அனிருத் இசையமைத்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இது பெண்கள் அமைப்பு மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பையும் பெருமளவு சம்பாதித்திருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், பெண்கள் அமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் அனிருத், சிம்பு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவை கோர்ட்டில், ஜாமினில் வெளிவர இயலாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அனிருத் மற்றும் சிம்புவிற்கு கோவை போலீசார் சார்பி்ல 2முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும், அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர்.
இந்த பாடலுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று அனிருத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிம்புவும் இதை உறுதிப்படுத்தியிருந்தார். இருந்தபோதிலும், விசாரணைக்காக, சிம்பு மற்றும் அனிருத் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வரும் 29ம் தேதிக்குள் சிம்பு போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த அனிருத், இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய அனிருத், இவ்விவகாரம் தொடர்பாக, நேற்று இரவு 11 மணியளவில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தனக்கும், இப்பாடலுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ள அனிருத், இதுதொடர்பாக, 2 பக்க விளக்க கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
அதோடு, பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக கோவை போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றி என்று அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top