News

முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பிரச்னை!

ரெமோ’ படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் மேடையிலேயே சிவகார்த்திகேயன் அழுததை இன்று வரை திரையுலகத்தில் உள்ளவர்களே மறக்காமல் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கௌதம் மேனன் கூட ‘சிவகார்த்திகேயனைப் போல என்னால் அழ முடியாது’ என்று கிண்டலடிக்கும் அளவிற்கு இருந்தது. சிவகார்த்திகேயனைத் தங்களது தயாரிப்பில் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என சில முக்கியத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கம் வரை பிரச்சனையைக் கொண்டு போனார்கள். ‘ரெமோ’ படம் வெளியானதிலிருந்தே இந்த விவகாரம் சூடுபிடித்தது.

இதனிடையே, மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படம் நேற்று ஆரம்பமாகியது. ஆனால், படப்பிடிப்பை காலையில் ஆரம்பிக்க விடாமல் சிலர் பிரச்சனை செய்ததாக கோலிவுட் முழுவதும் பரபரப்பான பேச்சு இருந்தது. படப்பிடிப்பை இரவுதான் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள். தங்களுக்கு ஒரு பதிலைச் சொல்லாமல் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்கக் கூடாது என அவரைக் கட்டாயப்படுத்தினார்களாம். கடைசியில் ஒரு வழியாகப் பிரச்சனையைப் பேசி முடித்திருக்கிறார்கள்.

அதன்படி, அண்ணன், தம்பிகளை மட்டுமே வைத்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய தயாரிப்பாளருக்கு தனியாக ஒரு படத்திலும், மற்ற இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் சேர்த்து ஒரு படத்திலும் நடித்துக் கொடுப்பதாக சிவகார்த்திகேயன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாம். அதைத் தொடர்ந்தே இரவில் மோகன்ராஜா – சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். அண்ணன், தம்பி நடிகர்கள் காப்பாற்றாமல் போனதால்தான் அந்தத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தன் தயாரிப்பில் நடித்தே ஆக வேண்டும் என இப்படி மல்லு கட்டுகிறாரோ என சக தயாரிப்பாளர்களே அந்தத் தயாரிப்பாளரைக் கிண்டலடிக்கிறார்களாம்.

 

சிங்கம் சீறினால்தான் உண்டு, இல்லையென்றால் பச்சையாக இருக்கும் அனைத்தும் பட்டுப் போய்விடும் என்கிறார்கள்.

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top