News

அச்சம் என்பது மடமையடா- திரைவிமர்சனம்

Achcham Yenbadhu Madamaiyada Review

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடிகர் சிலம்பரசன் இணைந்து வழங்கியிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் விதத்திலேயே அவர்களது முந்தைய படம் ஏற்படுத்திய தாக்கம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் துளியும் குறையவில்லை என்பதற்கு சான்று. அந்த எதிர்பார்ப்பைப் படம் எந்த அளவு திருப்திபடுத்துகிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
சிம்பு (கதாநாயகன் பெயர் சஸ்பென்ஸ். படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்) படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் மேல்நடுத்தரவர்க்க இளைஞர். அவரது தங்கையின் தோழி லீலா (மஞ்சிமா மோகன்) அவர்களது வீட்டில் சில நாட்கள் தங்க நேர்கிறது. லீலா மீது காதல் வசப்படுகிறான் நாயகன். இருவருக்கும் நட்பு மலர்கிறது. ஒன்றாக பயணிக்கும் சூழல் உருவாகிறது.
வாழ்க்கை சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று லீலாவையும் மகாராஷ்டிராவில் இருக்கும் அவளது பெற்றோரையும்  ஒரு கும்பல் கொல்ல முயற்சிக்கிறது. இதற்கு அந்த ஊரில் இருக்கும் காவல்துறை அதிகாரியும் (பாபா செகல்) உடந்தை. சாதாரண மனிதனான நாயகன் அவர்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சூழலைத் தனதாக்கிக்கொள்கிறான். அவர்களைக் காப்பாற்றத் தன் உயிரைப் பணயம் வைக்கிறான்.
இந்தப் போராட்டத்தில் அவன் பெறுவதும் இழப்பதும் என்ன? அவனது காதலும் காதலியும் உயிர்பிழைத்தனரா என்பதைத் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்க.
ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் கதைக் கரு என்பதற்கு படத்தின் ட்ரெய்லரும் மற்ற பிரமோஷன்களும் நம்மைத் தயார்படுத்திவிட்டன. கவுதம் இதுவரை ரசனையான காதல் படங்களையும் சுவாரஸ்யமான ஆக்‌ஷன் படங்களையும் எடுத்துவந்தார். இதில் அவை இரண்டையும் முயற்சித்திருக்கிறார். முதல் பாதில் காதல் படம் இரண்டாம் பாதி ஆக்‌ஷன் படம். நாயகனின் காதல்தான் இரண்டுக்கும அடிப்படை என்ற விதத்தில் அவை தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இரண்டு பாதிகளும் வெவ்வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  இருப்பதுதான் இயக்குனரின் நோக்கமும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே படத்தின் இரண்டு பாதிகளையும் தனித் தனியாக அலசுவது தவிர்க்க முடியாததாகிறது.
முதல் பாதி கவுதம் இதுவரை இயக்கிய காதல் படங்களின் வார்ப்பில்தான் உள்ளது என்றாலும் ரசிக்க முடிகிறது. கதையளவில் முந்தைய படங்களின் சாயல் இல்லை என்றாலும் காட்சிகள், அவை நகரும் விதம் ஆகியவை ஊகிக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. இருப்பினும் படம் ரசனையாகச் செல்கிறது. நாயகனின் காதல் காட்சிகள் எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் இளைஞர்களைக் கவரும் வகையில் மற்ற பிரிவினரும் புன்னகை பூக்கும் வகையில் அழகாக உள்ளன.
இந்தக் காட்சிகளில் அட போட வைக்கும் அளவுக்கு பிரமாதமாகவோ ஆர்ப்பரித்து ரசிக்கும் அளவுக்கோ பெரிதாக எதுவும் இல்லைதான். ஆனால் இன்னும் எத்தனை காதல் படங்களை வேண்டுமானாலும் எடுக்கும் திறமை கவுதமுக்கு உள்ளது, அந்த அளவுக்கு அவரிடம் காதல் குறித்தான ரசனையும் பார்வையும் உள்ளன என்பதைக் உறுதிபடுத்தும் விதமாக இந்தக் காட்சிகள் இருக்கின்றன. ஆங்காங்கே கதையோட்டத்துடன் வரும் நகைச்சுவையும் ஏ.ஆர்.ரகுமானின் ரம்மியமான இசையும் முதல் பாதியை ரசிக்கவைப்பதில் பெருமளவில் கைகொடுத்திருக்கின்றன.
நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமையும். முதல் பாதியிலேயே படத்தின் ஐந்து பாடல்களும் (சலிப்பு ஏற்படாமல்) பயன்படுத்தப்பட்ட விதமும் பாராட்டத்தக்கவை.
இருப்பினும் தேவைக்கதிகமான ஸ்லோமோஷன் காட்சிகள் மற்றும் முதல் பாதியின் ஒட்டுமொத்த நீளம் ஆகியவை ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அதற்குப் பின்இடைவேளையில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்நோக்க வைக்கிறது திரைக்கதை.
இரண்டாம் பாதி படம் முற்றிலும் பரபர ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தடம் மாறுகிறது. சிம்பு ரசிகர்களை தொண்டை கிழிய கத்தி ஆர்ப்பரிக்க வைக்கும் ஒரு சில மாஸ் காட்சிகள் இருக்கின்றன. துப்பாக்கிச் சூடுகள், கொலைகள், தப்பித்தல்  ஆகியவற்றை பெருமளவில் நம்பகத்தனமையுடன் காண்பிக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களின் பதைபதைப்பு அவர்கள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமே என்ற பரபரப்பு பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கிறது.
ஆனால் மாற்றி மாற்றி சேஸிங், சண்டை, துப்பாக்கி சூடு காட்சிகள் வருவது ஒரு கட்டத்துக்கு மேல் ஆயாசம் தருகிறது.  இவை அனைத்தும் யதார்த்தத்தில் அந்த சூழலில் நடக்க்கூடியவைதான் என்று உணர முடிந்தாலும் படம் நீண்டுகொண்டே போகிறது என்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.
இறுதியாக படம் முடியும் விதம் நாயகன் பாத்திரத்துக்கு ஏற்படும் மாற்றம் ஆகியவை நம்பும்படியாக இல்லை. இதையும் ஓரளவு நம்பும்விதமாக சித்தரிக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார் என்றாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தவிர இரண்டாம் பாதியும் தேவைக்கு அதிகமாக நீட்டிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. குறிப்பாக காவல்நிலையத்தில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை தவிரிக்கப்பட்டிருக்கலாம்.
நாயகி மற்றும் அவளது பெற்றோரை கொல்ல முயற்சிப்பதற்கான காரணம் இறுதியில்தான் சொல்லப்படுகிறது. அதுவரை அதுகுறித்த கேள்விகூட படத்தில் யாருமே எழுப்பாமல் இருப்பது சற்று உறுத்தலாக உள்ளது. கடைசியில் சொல்லப்படும் காரணமும் போதுமான அளவு அழுத்தம் கொண்டதாக இல்லை.
சிம்புவுக்கு மிகக் கச்சிதமான பாத்திரம். அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இத்தனை சிறப்பாக செய்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் ஓவர் ஆக்ட் அல்லது ஓவர் ரியாக்ட் செய்யாமல் இயக்குனர் கேட்டதை நடித்துக்கொடுத்திருக்கிறார். அது சிறப்பாகவும் வந்திருக்கிறது. இந்த மாதிரி நிறைய படத்துல நடிங்க பிரதர்.
நாயகி மஞ்சிமா மோகனுக்கு நல்வரவு. இயல்பான அழகு, அந்த அழகை எடுப்பாகக் காட்டும் உடைகள்  என்று அவரைப் பார்க்கவே இனிமையாக இருக்கிறது. நடிப்புக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சொதப்பாமல் செய்திருக்கிறார். வசன உச்சரிப்பில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாயகனின் நண்பனாக வரும் சதீஷ் முதல் பாதியில் காமடிக்கு நன்கு உதவுகிறார். இரண்டாம் பாதியில் உயிருக்கு ஆபத்தான சூழலில் நாயகனுடன் பயணிக்கும் பாத்திரத்தில் குறை சொல்ல முடியாத விதத்தில் நடித்திருக்கிறார்.
கவுதம் படங்களில் அவரது தனித்துவ பாணியிலான வசனங்கள் ஈர்க்கத் தவறுவதில்லை. இந்தப் படத்திலும் கவனித்து ரசிக்கத்தக்க வசனங்கள் இரண்டு பாதிகளிலும் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிடுவதைவிட படத்தில் பார்ப்பது நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப் பெரிய பலம். ஐந்து பாடல்களும் முதல் பாதிலேயே வந்துவிட்டாலும் அவை சலிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இசையை ரசிக்க முடிவதும் காரணம். முதல் பாதியில் காதலை உணரவைப்பதிலும் இரண்டாம் பாதியில் பரபரப்பைக் கூட்டுவதிலும் பெரும்பாங்கு ஆற்றுகிறது பின்னணி இசை.
டான் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு (கூடுதல் ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர்) காட்சிகளின் அழகைக் கூட்டுகின்றன. குறிப்பாக பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவின் படமாக்கும் தரத்தில் ஒரு மைல்கல்.
மொத்தத்தில் முதல் பாதியின்  நீளம், இரண்டாம் பாதியின் கடைசி 20 நிமிடங்களில் ஏற்படும் ஆயாசம் மற்றும் நம்புவதற்குக் கடினமான திருப்பங்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால். ஒரு ரசனையான காதல் மற்றும் பரபரப்பான ஆக்‌ஷன் படம் தந்ததற்காக ‘அச்சம் என்பது மடமையாடா’ படக்குழுவினரை  மனமார வாழ்த்தலாம்.

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top