News

Kaashmora Movie Review

கார்த்தி முதல்முறையாக மூன்று வேடங்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்பு, நயன்தாராவின் அசத்தலான ராணி வேடம், ஸ்ரீதிவ்யாவின் இணைப்பு, விவேக்கின் காமெடி, பிரமாண்டமான செட்டிங்ஸ் என ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘காஷ்மோரா’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்

காஷ்மோரா (கார்த்தி) பில்லி சூன்யம் ஓட்டும் ஒரு நவீன டெக்னாலஜி (போலி) மந்திரவாதி. இவருக்கு தந்தை விவேக், தங்கை மதுமிதா உள்பட குடும்பத்தினர் ஐந்து பேர் உடந்தை. இவரால் பல பிரபலங்கள் பில்லி சூனியத்தில் இருந்து காப்பாற்றப்பட இவருடைய புகழ் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் இவரது போட்டியாளர்கள் இவர் மீது கோபப்படுகின்றனர். இந்நிலையில் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவி ஸ்ரீதிவ்யா, காஷ்மோராவிடம் உதவியாளராக சேர்ந்து அவரது பொய்முகத்தை வெளிக்காட்ட முயற்சிக்கின்றார்.

kashmoraஇந்நிலையில் பிரபல அரசியல்வாதியும் அமைச்சருமான ஒருவர் தனது அரசியல் எதிரி ஒருவரை சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி கொலை செய்கிறார். ஆனால் அந்த கொலையை சிபிஐ விசார்ணை செய்யவுள்ளதாக செய்திகள் வந்ததை அடுத்து அவர் காஷ்மோராவிடம் தஞ்சம் அடைகிறார். காஷ்மோரா செய்யும் ஒருசில ஏமாற்று வேலையாலும், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவும் (இதை இயக்குனர் விஷுவலிலும் காட்டியுள்ளார்) அமைச்சரின் பிரச்சனை சரியாகிவிடுகிறது. இதனால் காஷ்மோராரை முழுமையாக நம்புகிறார் அமைச்சர். இந்நிலையில் திடீரென அந்த அமைச்சரின் வீட்டிற்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வரவுள்ளதாக செய்தி அறிகிறது. எனவே அவர் உடனடியாக தான் பதுக்கியிருந்த ரூ.500 கோடி பணம், விலைமதிப்பில்லாத தங்கம் மற்றும் முக்கிய டாக்குமெண்டுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக காஷ்மோரா வீட்டில் (ஆசிரமத்தில்) வைக்கின்றார்.

இதை தற்செயலாக தெரிந்து கொள்ளும் விவேக், பணம், நகையுடன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சிக்கும்போது திடீரென குடும்பத்தினர் ஐந்து பேரும் ஒரு பேய் பங்களாவுக்கு இழுத்து வரப்படுகின்றார்கள். இதுவரை பொய்யாக பேய் ஓட்டிக்கொண்டிருந்த இவர்களுக்கு அந்த வீட்டில் உண்மையாகவே பேய் இருக்க, அந்த பேய்கள் எதற்காக ஐந்து பேர்களையும் அங்கே இழுத்து வந்துள்ளது என்பதும், ரூ.500 கோடியை தேடி தனது படை பரிவாரங்களுடன் வரும் அமைச்சரின் ஆட்களிடம் இருந்தும் காஷ்மோரா தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றினாரா? என்பதும்தான் மீதிக்கதை.

காஷ்மோரா, ராஜ்நாத் மற்றும் இன்னொரு கேரக்டர் (அந்த இன்னொரு கேரக்டர் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்) ஆகிய மூன்று கேரக்டர்களிலும் கார்த்தி மிக அழகாக வேறுபடுத்துகின்றார். காஷ்மோரா கேரக்டரில் எந்த அளவுக்கு காமெடி துள்ளுகிறதோ அதே அளவுக்கு ராஜ்நாத் கேரக்டரில் வீரமும் நயவஞ்சமும் அள்ளுகிறது. இளவரசி நயன்தாரவை அவர் செய்யும் சூழ்ச்சி, போர் ஆகியவற்றில் நடிப்பு பளிச்சிடுகிறது. மொத்தத்தில் இந்த படம் கார்த்தியின் நடிப்புக்கு சரியான தீனி போட்ட படம்

இளவரசி ரத்தினமகாதேவியாக வரும் நயன்தாராவுக்கு ஒரு பாடல், ஒரு வாள்சண்டை, ஒருசில வசனங்கள் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை என குறைந்த பகுதியே இருந்தாலும் தனது அனுபவ நடிப்பின் மூலம் மிக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது கண் எதிரே தனது காதலன் வெட்டப்படுவதை பார்த்து கொதிப்பது, தன்னை அடைய நினைக்கும் ராஜ்நாத்தை ராஜதந்திரமாக வெல்வது, தனக்காக உயிர் கொடுத்த பணிப்பெண்களை பார்த்து அதிர்ச்சி அடைவது, கிளைமாக்ஸில் காஷ்மோரா குடும்பத்தினர்களை காப்பாற்ற போராடுவது என நயன்தாரா உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீதிவ்யாவுக்கு ஆராய்ச்சி மாணவி வேடம். காஷ்மோராவின் போலித்தனத்தை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்த முயற்சிக்க, அதை விவேக் புத்திசாலித்தனமாக தடுக்க ஒரே கலகலப்பு. கிளைமாக்ஸில் ஸ்ரீதிவ்யாவின் கேரக்டருக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் ஆச்சரியப்படுத்துகிறார்

சாதாரணமான கேரக்டர் என்றாலே வெளுத்து வாங்கும் விவேக், போலிச்சாமியார் வேடம் என்றால் விட்டு வைப்பாரா? கோவில்ல கேமிராவும் எலக்ட்ரிக் மணியும் என்னிக்கு வந்துச்சோ அன்னிக்கே சாமிகள் எல்லாம் கோவிலில் இருந்து வெளியேறி வாக்கிங் போயிருச்சு உள்பட பல நகைச்சுவை வசனங்கள். அதே போல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மதுமிதாவுக்கு நகைச்சுவை கலந்த நல்ல கேரக்டர்.

நயன்தாரா பாடல் உள்பட படத்தின் எந்த பாடலும் மனதில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் தூள் கிளப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக பேய்விட்டில் கார்த்திக் தனியாக மாட்டிக்கொண்டபோதிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பின்னணி இசை அபாரம்

கலை இயக்குனரின் பிரமாண்டமான செட்டிங்கை காட்சி படுத்துயதில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் உழைப்பு தெரிகிறது கச்சிதமான எடிட்டிங் படத்தின் மைனஸ்களை மறைத்துவிடுகிரது.

படத்தில் கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் பணியை சரியாக செய்திருக்கும் நிலையில் இயக்குனர் கோகுல் மட்டும் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார். முதல் பாதியை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே ஒதுக்கிவிட்டார். இந்த நகைச்சுவைக் காட்சிகள் பார்க்கும்படி இருந்தாலும் படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதால் நெருடுகிறது. இந்த படத்தை இரண்டாம் பாதியில் இருந்து பார்த்தால் கூட படத்தின் கதை புரியும். அதேபோல் முடிவு என்ன என்பதை சில நிமிடங்களுக்கு முன்பே ஊகிக்கும்படியான திரைக்கதை, ஒருசில வசனங்களை தவிர மற்ற வசனங்கள் சாதாரணமாக இருக்கின்றன. மேலும் கார்த்தியின் மூன்றாவது கேரக்டரின் தலை திடீர் திடீரென தனியாக கழண்டு போய் பேசுகிறது. ஒருமுறை, இருமுறை என்றால் இதை பயத்துடன் ரசிக்கலாம். அடிக்கடி வருவது போர் அடிக்கின்றது. இதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் முதல் பாதி நகைச்சுவை, இரண்டாவது பாதி ஆச்சரியம் என சரியான கலவையுடன் உள்ளது. கார்த்தி, காமெடி, நயன்தாராவுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top