News

Kodi Movie Review

kodi tamil movie, kodi movie review, kodi tami movie,
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம், த்ரிஷா முதல் முறையாக நெகடிவ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், தனுஷ் தயாரிப்பில் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் துரை செந்தில்குமார், தனுஷ் என்ற சிறந்த நடிகருடன் முதல்முறையாக இணைந்திருக்கும் படம் என்று பல்வேறு காரணங்கள், ‘கொடி’ படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இன்று வெளியாகியிருக்கும் ‘கொடி’தீபாவளித் திருநாளைக் மகிழ்ச்சியாகக் கொண்டாட உதவுமா என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்க.

ஜனநாயகக் கட்சியின் அடிப்படை ஊழியர் (கருணாஸ்) கட்சிக்கும் தலைமைக்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். அவருக்கு இரட்டை மகன்கள் பிறக்கின்றனர். மூத்த மகன் கொடி (தனுஷ்) சிறுவயதிலிருந்தே தந்தையின் ஆதரவுடன் அரசியல் பழகுகிறான். இளையவன் அன்பு (தனுஷ்) அம்மா சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாக வளர்கிறான்.

கட்சிக்காக தந்தை உயிர்நீத்துவிட, அம்மாவின் எதிர்ப்பை மீறி கட்சியின் முழுநேர ஊழியராகிறான் கொடி. கல்லூரி விரிவுரையாளராகிறான் அன்பு.

ஜனநாயகக் கட்சியின் போட்டிக் கட்சியான குடியரசுக் கட்சியில் கொடியைப் போலவே சிறு வயது முதல் உழைத்து முன்னேறி அரசியலில் சாதிக்கத் துடிக்கும் பெண் ஊழியர் ருத்ரா (த்ரிஷா). அரசியலில் முன்னேற எதையும் செய்யத் துணிந்தவள்.
அரசியல் எதிரிகளான கொடியும் ருத்ராவும் ரகசியமாகக் காதலிக்கிறார்கள். ஆனால் தங்கள் தனிப்பட்ட உறவு அரசியல் லட்சியங்களை பாதிக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள்.

ஒரு இடைத் தேர்தலில் இருவருமே ஒரே தோகுதியின் போட்டி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட அவர்களுக்கிடையேயான அரசியல் பகை முற்றுகிறது.

சாமர்த்தியமான காய் நகர்த்தல்களும் துரோகங்களும் போராட்டங்களும் நிறைந்த இந்த அரசியல் விளையாட்டில் வென்றது யார்? இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் உறவும் என்ன ஆயின? இவற்றையெல்லாம் திரையில் காண்க.
இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்ற சொல்லத்தக்க வகையில் ஆளும்கட்சி-எதிர்கட்சி அரசியல், உட்கட்சி அரசியல், கட்சியில் முன்னேறுவதற்காக தனிநபர்கள் மேற்கொள்ளும் துரோக அரசியல் ஆகியவை ஆழமாகக் கையாளப்பட்டுள்ளன.

பொதுவாக அரசியல் படங்களைப் போல் இந்தப் படமும் யதார்த்தத்துக்கு அணுக்கமாக இருப்பது போல் காண்பித்துக்கொள்ள முயன்றாலும் அப்படியில்லை. அதோடு கேளிக்கை அம்சங்களும் எதிர்பார்த்த அளவு இல்லை அல்லது அதற்கான முயற்சி கைகூடவில்லை. குறிப்பாக முதல் பாதியில் நாயகன் இரட்டையர்களாகப் பிறந்ததுபோல் அமைந்த பல படங்களில் பார்த்த காட்சியமைப்புகள் வந்து அலுப்பூட்டுகின்றன. இடைவேளைக்கு சற்று முன்பு அரசியல் காய்நகர்த்தல்களும் மோதலும் தீவிரமடையும் இடத்தில் படம் வேகம்கொள்ளத் தொடங்குகிறது. இடைவேளைக் காட்சியும் அதை ஒட்டி வரும் எதிர்பாரா திருப்பமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

இரண்டாம் பாதியில் பல மாஸ் காட்சிகள் நிறைய இருக்கின்றன. தனுஷ் இவற்றை தனது ட்ரேட்மார்க் வசன உச்சரிப்பு உடல்மொழி ஆகியவற்றால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு தனுஷ் ரசிகரும் மாஸ் படங்களின் ரசிகர்களும் விசிலடித்துக் கொண்டாடத்தக்க காட்சிகள் இவை.

அனால் இவற்றுக்கு மேல் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் ஈர்க்கத்தக்க விஷயங்கள் பெரிதாக இல்லை. அரசியல் அரங்கில் நடக்கும் விஷயங்கள், மிக எளிதாக எம்பி, எம்எல்ஏ பதவிகள் பெறுவது, அத்தகைய முக்கியப் பதவுகளில் இருப்போர் தனியாகவே பல இடங்களுக்கு வந்து செல்வது, ஒரே கட்சியைச் சேர்ந்த எம்பியும் எம்எல்ஏவும் தனியாக சந்தித்து பஞ்ச் வசனங்களைப் பறிமாறிக்கொள்வது உள்ளிட்ட காட்சிகளில் இருக்கும் லாஜிக் பிழைகள் உறுத்துகின்றன. திரைக்கதை பரபரவென்று வேகமாக நகர்ந்திருந்தால் இந்தப் பிழைகள் கவனம்பெறாமல் போயிருக்கலாம்.

முக்கிய கதாபாத்திரங்கள் எடுக்கும் சில அதிரடி முடிவுகளும் அந்தப் பாத்திரங்களுக்கு ஏற்படும் திடீர் திருப்பங்களும் வலுவான காரணங்களுடன் சொல்லப்படாததால் சரியான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன.

தனுஷ் மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்களும் அவர்கள் அவற்றில் நடித்திருக்கும் விதமும், மேலே சொன்ன குறைகளை எல்லாம் மீறி படத்தை ரசிக்க வைக்கின்றன.

மாஸ் ஆன கொடி பாத்திரத்தில் தன் பங்கை வழக்கம்போல் சிறப்பாக செய்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் தனுஷ், அம்மாவுக்கு அடங்கிய ’நல்ல பிள்ளை’ அன்புவாகவும் ஈர்க்கிறார். இப்படி ஒரு ’பக்கத்து வீட்டு பையன்’ வேடத்தில் இவரைப் பார்ப்பது புத்துணர்வைத் தருகிறது.

த்ரிஷாவுக்கு இது லைஃப்டைம் கேரக்டர். இத்தனை வலுவான துணிச்சலான, பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அழகாகவும் அரசியல்வாதி வேடத்துக்குத் தகுந்த மிடுக்குடனும் இருக்கிறார். முகபாவங்கள், உடல்மொழி ஆகியவை கச்சிதமாக உள்ளன. இவருக்கு பின்னணிக் குரல் அளித்திருப்பவருக்கு சமமான பாராட்டுகள். வலுவான வசனங்களை சரியான உச்சரிப்பு மற்றும் குரலுடன் பேசியிருப்பது ருத்ரா பாத்திரம் ஏற்படுத்தும் தாக்கத்தை பெருமளவில் கூட்டுகிறது.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதியில் துணிச்சலும் துடுக்கும் நிறைந்த பெண்ணாக மனதில் இடம்பிடிக்கிறார். இரண்டாம் பாதியில் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார்.

அரசியல் நுணுக்கங்கள் அறிந்த மூத்த அரசியல்வாதி மற்றும் கட்சித் தலைவராக கண்ணியமான நடிப்பைத் தந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அன்பும் கண்டிப்பும் நிறைந்த அம்மாவாக சரண்யா மற்றுமொரு சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். இவருக்கும் இவரது இரு மகன்களுக்கும் இடையிலான உறவு சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் குறிப்பிட்டு பாராட்டத்தக்கது. தனுஷின் நம்பிக்கைக்குரிய நண்பனாக காளி வெங்கட் மனதில் நிற்கும் நடிப்பைத் தருகிறார்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக மாஸ் காட்சிகளில். பாடல்களில் ‘பொட்டைக் கோழி’ மற்றும் ’கொடி’ தீம் பாடல் மட்டும் கவனம் கவர்கின்றன.

பொள்ளாச்சியின் எழிலை அப்படியே அள்ளித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். படத்தின் நீளத்தைக் குறைத்து வேகத்தைக் கூட்ட உதவியிருக்கலாம் படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு.

மொத்தத்தில் தனுஷ் த்ரிஷா ஆகியோரின் சிறந்த நடிப்பு மற்றும் சுவாரஸ்யமான அரசியல் காட்சிகளுக்காக ‘கொடி’ படத்தை பார்த்து ரசிக்கலாம்.
kodi danush, kodi trisha,kodi actress,kodi

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top